Thursday, 30 April 2015

Thiruchendhur Tour - 26.04.2015 - 28.04.2015

ஏப்ரல் மாதம் 26,27,28-ம் தேதிகளில் 86 நகரத்தார் கலந்து கொள்ள திருச்செந்தூர் சுற்றுலா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.  25ம் தேதி இரவு 11 மணிக்கு 2 பேருந்துகளில் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர்.  திருச்செந்தூரில் 26ம் தேதி காலை 5.00 மணிக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.  அனைவரும் முருகனின் அருள் பெற்று மகிழ்ந்தனர்.  பின் வனதிருப்பதி, மணப்பாடு சர்ச், உவரி சிவன் கோவில், சுசீந்திரம் ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு இரவு கன்னியாகுமரியில் தங்கினார்கள்.  27ம் தேதி காலை கன்னியாகுமரி அம்மன் கோவில், விவேகானந்தர் பாறை பார்த்துவிட்டு மாலை திருப்பரப்பு நீர் வீழ்ச்சியில் ஆனந்தமாய் குளித்தார்கள்.  பின் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பார்த்துவிட்டு இரவு திருவனந்தபுரத்தில் தங்கினார்கள்.  மறுநாள் பலவங்காடி பிள்ளையார், அனந்தன் காடு, பத்மநாப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, ஆற்றுக்கால் பகவதி, முக்கோலக்கல் பகவதி, கோவளம் பீச் பார்த்த பின் மாலை திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் கோவில் தரிசனம் முடித்து திருச்சி வந்து சேர்ந்தனர்.  இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்குழு உறுப்பினர் திரு KRL.இராமநாதன் மற்றும் MRM.அழகப்பன் அவர்கள் மிகச் சிறப்பாக சுற்றுலாவை நடத்தித் தந்தனர்.

Tuesday, 21 April 2015

Joint Meeting - Salem Nagarathar Sangam

20.04.2015 அன்று மாலை 5.00 - 6.00 மணி வரை செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.  பின் 6.30 மணிக்கு கார்த்திகைக் கூட்டம் 120 நகரத்தார்கள் கலந்துக்கொள்ள கூட்டுப் பிரார்த்தனையுடன் தொடங்கியது.  தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும்
வரவேற்றார்கள்.  பின்பு சேலம் நகரத்தார் சங்கத்திலிருந்து கூட்டு கூட்டத்திற்கு தலைவர் திரு மோகன், செயலர் திரு விஸ்வநாதன், பொருளாளர் திரு ராமசுவாமி மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள்.  பின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு
இராமநாதன் அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி சிறப்பாக பேசினார்கள்.  செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.  அன்றைய இரவு விருந்தினை P.புதுப்பட்டியைச் சார்ந்த NIIT திரு சேதுராமன் அவர்கள் வழங்கினார்கள்.

Monday, 20 April 2015

Vegetable & Fruit Carving Workshop 19.04.2015


19.04.2015 அன்று நம் நகரத்தார் சங்கத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து உருவங்களை உருவாக்கிக் காட்டும் கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.


மாலை 3.30 மணியளவில் தொடங்கிய  நிகழ்ச்சியின் துவக்கத்தில் நம் நகரத்தார் சங்க மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தா சேதுராமன் அவர்கள் மிக மிக அருமையாக வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.  அவர்தம்


வரவேற்புரையில் திருச்சி நகரத்தார் சங்க மகளிர் அணி செய்துள்ள நற்செயல்களையும், செய்யவிருக்கும் எதிர்காலச் செயல்பாட்டுத் திட்டங்களையும் பற்றி எடுத்தியம்பினார்கள்.  ஏறத்தாழ 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்பயிற்சில் கலந்து கொண்டார்கள்.

பீட்ரூட், தக்காளி இவ்விரண்டு காய்கறிகளையும் வைத்து ஒரு ரோஜா மலரை அற்புதமாய் செய்முறை செய்து காட்டியது மிகச் சிறப்பாக இருந்தது.  இதனை திருச்சி கிளாசிக் பேக்கரியைச் சார்ந்த திரு முத்துக்குமார் மற்றும் திரு மணிகண்டன் இருவரும் செய்து காட்டினர்.

வாழைப்பழத்திலிருந்து 'கொக்கு' உருவம் வெளிவந்ததை திறந்த வாய் மூடாமல் பயிற்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் கண்டு வியப்பும் மகிழ்வும்
அடைந்தனர்.  காரட், உருளை மற்றும் குடமிளகாய் மூன்றும் மிக அழகான மரமாக மாறியதும், தக்காளியும், லிச்சிப்பழமும் அழகான கூடையாய் உருமாறியதும், வெள்ளரிக்காய்கள் கடல் மீன்களாக, அழகிய ஆப்பிள்கள் வாத்தாக உருமாறியதும், பப்பாளியும் லிச்சிப்பழங்களும் அரிய இயற்கைக் காட்சிகளாய் மாறியதும் அனைவரும் கண்டு வியந்தனர். மாங்காய் மீன், ஆரஞ்சுத் தாமரை உருவங்கள் கண்களுக்கு விருந்தளித்தன.  50 பார்வையாளர்களும் 25 பங்கேற்ப்பாளர்கள் தாம் கொண்டு வந்திருந்த காய்கறி, கனி வகைகளில் இருந்து இவுருவங்களை அவர்களே செய்து மகிழ்வடைந்தனர்.  எல்லோருக்கும் கட்லெட், கேக், தேனீர் வழங்கப்பெற்றது.  நகரத்தார் சங்க இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமிகு இராமநாதன் அவர்கள் நன்றி கூற இப்பயிற்சி   5.30 மணியளவில் இனிதே முடிவுற்றது.

Saturday, 11 April 2015

Swamimalai Paadhayathirai Vel Abishegam

10.04.2015 அன்று KK நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் நகரத்தார் சங்கத்தினர் சுமார் 30 பேர் 5 காவடிகளுடன் சுவாமிமலை பாதயாத்திரை செல்கின்ற வழியில் நம் சங்கத்தில் இரவு தங்கிச் சென்றனர்.  அன்று வேல் அபிஷேகம் நடைப்பெற்றது.  சுமார் 150 நகரத்தார்கள் கலந்து கொண்டனர்.  காவடிக்காரர்களும், பாத யாத்திரை செல்பவர்களும் கௌரவிக்கப்பெற்றனர்.  இரவு விருந்து நம் சங்கம் சார்பில் அனைவருக்கும் வழங்கப்பெற்றது.

Monday, 6 April 2015

Valmiki Ramayanam Navaham Ubanyasam 28.03.2015 - 05.04.2015

பாரத நாடு பழம் பெரு நாடு; நாமனைவரும் பெருமை கொள்ளும் நம் கலாச்சார மரபுகள் சணதன காலம் முதல் இன்று வரையும், இன்னும் யுக யுகங்களையும் கடந்து தொடர உள்ளது. தொன்மைச் சிறப்பினை காலம் காலமாய் காத்து வரும் பண்பும் இயற்கையாகவே இம்மண்ணில் கலந்துள்ளது. அத்தகைய சிறப்பையும் பெருமையையும் நம்மக்களுக்கு வழிக்காட்டிச் செல்லும், கலங்கரை விளக்கமாய் நமக்குள்ள விலைமதிப்பில்லா பொக்கிஷங்களாக வரும் பாரத இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும். வாழ்க்கை முறைகளை செப்பனிடும் நீதி நூல்கள் இவை. இந்து மதத்தின் சாரமாய் நின்று விளங்கும் இந்த இதிகாசங்களில் 'ராம காவியம்' இராமபிரானின் வாழ்வையே ஒரு பாட நூலில் இயம்பியது 'இராமாயணம்'. இதைப் பற்றிய சிறப்புகளை நம் சமூக மக்கள்
பக்தியுடன் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்திட நினைத்து திருச்சி நகரத்தார் சங்கம் "வால்மீகி இராமாயணம் நவாஹம் உபந்யாஸம்" நடத்திடத் தீர்மானித்தது. நம் சங்க முன்னாள் தலைவர் மதகுபட்டி திரு திருநாவுக்கரசு செட்டியார் அவர்களின் சீரிய முயற்சியால் பெருமைமிகு திப்பிராஜபுரம் மோஹன் ராம் தீட்சிதர் மற்றும் அவரது மூத்த சகோதரர் பெருமைமிகு பட்டாபிராம தீட்சிதர் இருவராலும் "வால்மீகி இராமாயணம் நவாஹம் உபந்யாஸம்" 28.03.2015 முதல் 05.04.2015 முடிய நாள்தோறும் நம் சங்கக்கட்டிடத்தில் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

28.03.2015 அன்று 'வால்மீகி இராமாயணம்' தொடங்கிய வரலாறு முதல் 'இராமபிரான் ஜனனம்' வரையிலான உபந்யாஸம் நடைப்பெற்றது . அன்று இரவு உணவு விருந்துபசாரம் காரைக்குடி திரு N.முருகப்பன் குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) வழங்கினார்கள்.

29.03.2015 அன்று "ஸீதா கல்யாணம்' வரையிலான
சம்பவத்துடன் உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்றைய இரவு விருந்து அரிமளம் திருமதி சிந்தாமணி ஆச்சி குடும்பத்தினர் அளித்தார்கள்.

30.03.15 அன்று இராமாயணத்தின் சூச்சும முடிச்சான 'கைகேயி வரதானம்' வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பு உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்று குழிப்பிறை டாக்டர் A.முத்துராம் குடும்பத்தினர் அனைவருக்கும் விருந்தளித்தார்கள் .

31.03.2015 அன்று 'சித்ரகூட கமனம்' வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பு உபந்யாஸம் நடைப்பெற்றது. குழிப்பிறை திரு S.பொன்னப்பன்  குடும்பத்தினர் அன்றைய இரவு விருந்தினை அளித்தார்கள்.

01.04.2015 பாரத்தின் பெருமையையும் சகோதர வாஞ்சை, நீதி நெறி வாழ்க்கையின் சாரம்சமான 'பாதுகா   பட்டாபிசேஷகம்' வரையிலான 
நிகழ்ச்சிகளின் தொகுப்பு உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்று இரவு உணவு விருந்துபசாரம் பாகனேரி திரு V.தியாகராஜன் குடும்பத்தினர், ஸ்ரீ அபிராமி ஸ்டீல்ஸ் அவர்கள் வழங்கினார்கள் .

02.04.2015 அன்று 'சபரி மோட்சம்' வரையிலான நிகழ்வுகளின் தொகுப்புகள்  உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்றைய இரவு விருந்து முன்னாள் தலைவர் மதகுபட்டி திரு R.திருநாவுக்கரசு அவர்களின் புதல்வர் திரு T.விஸ்வநாதன்  குடும்பத்தினர் அளித்தார்கள்.

03.04.2015 அன்று 'அங்குளியக தானம்' வரையிலான சம்பவங்கள் உபந்யாஸத்தில் இடம் பெற்றன. அன்றிரவு தேவக்கோட்டை திரு VA .முத்து குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) மற்றும் விரையாச்சிலை திரு CT.சம்பந்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் விருந்தளிதார்கள் .

04.04.2015 'ஹநுமத்ராவண ஸம்வாதம்' நிகழ்வு வரையிலான உபந்யாஸம் நடைப்பெற்றது. காரைக்குடி திரு RM.கிருஷ்ணன் குடும்பத்தினர் (முன்னாள் தலைவர்) அன்றைய இரவு விருந்தினை அளித்தார்கள்.

05.04.2015 அன்று 'விபிஷணசரணாகதி' மற்றும் 'இராமர் பட்டாபிஷத்துடனும்' உபந்யாஸம் இனிதே முடிவுற்றது. 9 நாளும் பூஜைக்கான மலர்களை P. புதுப்பட்டி திரு SP. சுவாமிநாதன் அவர்கள்  அளித்தார்கள்.

உபந்யாஸம் நடைப்பெற்ற இந்த 9 நாட்களிலும் நம் சமூக மக்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பக்திக் கடலில் கரைந்து மகிழ்வும் மனநிறைவும் அடைந்துள்ளனர்  என்பது கண்கூடாகக் கண்ட நிகழ்வு. பட்டாபிசேஷகம் நாளன்று 350 நகரத்தார்கள் கலந்து கொள்ள, நகரத்தார் சங்க உறுப்பினர்கள் நோட்டுப்புத்தகங்கள், பேனா, இனிப்புவகைகள், புத்தகங்கள், ஸ்லோக அட்டைகள் யாவும் நம் சமூக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். அன்று இரவு உணவு விருந்தை கண்டரமாணிக்கம் திரு S.சுந்தரம் குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) வழங்கினார்கள். வந்திருந்தவர்களுக்கு வேந்தன்பட்டி திரு V.பழனியப்பன் குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) Ice cream வழங்கி சிறப்பித்தார்கள்.

Yoga & Meditation - Steps


Yoga & Meditation Workshop 28.03.2015 - 05.04.2015

உலக நாடுகள் அனைத்தும் நம்மை வெகுவாக மதித்து நோக்கும் பல பெருமைகளில் ஒன்று தான் சித்தர்களும் யோகிகளும் நமக்களித்த நன்கொடையான 'யோகவும்' 'தியானமும்'. நம் சமூக மக்களின் நடைமுறை வாழ்க்கையின் இன்றியமையாப் பயிற்சிகளாக மாற்றிட வேண்டி எடுத்த முயிற்சிதான் 'யோகா' மற்றும் 'தியானப்பயிற்சி' வகுப்புகள்.
இப்பபயிற்சிகளை ஆர்வமுடன் நமக்கு பயன்படும் வகையில், வகுப்புகளை நடத்திட முன்வந்தவர் நம் சமூகத்தை சார்ந்த மதிப்பிற்குரிய திருமதி
சிந்தாமணி அண்ணாமலை அவர்கள். அமெரிக்காவில் 20 ஆண்டுகள் வசித்தபோது அங்கேயும் 'யோகா', 'தியான' பயிற்சி வகுப்புகளை நடத்தி புகழ்பெற்ற பெருமதிப்பிற்குரிய பெருந்தகை அவர்கள். 28.03.2015 முதல் 05.04.2015 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை நடந்த இந்தப் பயிற்சி வகுப்புகளில் நம் சமூக ஆச்சிமார்கள் 30 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இவ்வகுப்புகளை மிக அமைதியாகவும், மிகவும் பொறுமையுடனும் எல்லா யோகாப்பயிற்சிகளையும் எல்லோரும் முழுவதும் புரிந்துக்கொள்ளும்படி செயல்முறையாக செய்துக்காட்டியும், எல்லா ஆச்சிமார்களும் வீட்டில் சென்றவுடன் யாருடைய துணையும் இன்றி  பயிற்சிகளை செய்திடும் அளவுக்கு அவர்களுக்கு பயிற்சிகளை கட்டம் கட்டமாக முறையுடன்
பயிற்றுவித்த பாங்கு திருமதி சிந்தாமணி அண்ணாமலை அவர்களுக்கு உரித்தான சிறப்பான பாங்கு.
அவர்களின் பணி தொடரட்டும் என வாழ்த்துவதுடன், அவர்களின் சீரிய பணிக்கும் பயிற்சிக்கும் மனமார வாழ்த்துகளையும் நன்றிகளையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தா சேதுராமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.