Friday, 23 January 2015

Dubai Tour 17.01.2015 - 21.02.2015


தென்னிந்திய இளைஞர்களின் 'கனவுப் பிரதேசமான' துபாய்க்கு இன்பச் சுற்றுலாப்பயணமாகச் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டவுடன் நம் சமூக மக்கள் அடைந்த மகிழ்வு எல்லையற்றது!

இரண்டாம் முறை உலகப் பயணம் மேற்கொண்ட திருச்சி நகரத்தார் சங்கம் பெருமையோடு 'துபாய் பயண நிகழ்வுகளை' பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

16.01.2015 தமிழ் மக்களின் வளமையான, பழமையான, செழிப்பான 'உழவர் திருநாளாம்' பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான 'மாட்டுப் பொங்கலன்று' திருச்சி சங்கம் ஓட்டலின் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த குளுகுளு பேருந்தில் நகரத்தார் சமூக 49 பெருமக்கள் கொண்ட குழு தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் அன்பான ஆலோசனைகளின்படி மகிழ்வோடும் மங்கலகரமாகவும் சுற்றுலா குழு தலைவர் திரு AVK.சொக்கலிங்கம் அவர்கள் கொடி அசைக்க சென்னை நோக்கி பயணத்தை இனிதே தொடங்கினர்.

17.01.2015 சென்னை விமான நிலையம் வந்தடைதவுடன் துபாய் செல்லும் இண்டிகோ விமானம் காலை 6.45 மணிக்கு புறப்பாடுக்குத் தயாராய் இருந்த நிலையில், திருமதி உண்ணாமலை ஆச்சி அவர்கள் அனைவருக்கும் பிஸ்கட் வழங்கினார்கள்.  திரு இளங்கோ அவர்கள் அனைவருக்கும் கைத்துண்டு வழங்கி மகிழ்ந்தார்.  எல்லா முன் சோதனைகளும் நல்ல விதமாக முடிந்து அனைவரும் விமானத்தினுள் அடி எடுத்து வைத்து, தத்தம் இருக்கையில் அமர்ந்தனர்.  சிற்றுண்டி விமானத்தினுள் வழங்கப்பட்டது.  துபாய் நேரப்படி காலை 9.45க்கு துபாய் விமான நிலையம் சென்றடைந்து, சுற்றுலா மேலாளர் திரு ஜானகிராமன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த குளுகுளு பேருந்தில் 'Singanature Inn' ஓட்டலுக்கு சென்றனர்.  அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கி, பயணக் களைப்பு நீக்கி புத்துணர்வுடன் மதிய உணவுக்குத் தயாரானார்கள்.  மதிய உணவு Q's Cuisine உணவகத்தில் உண்டு, அங்கிருந்து துபாயின் புகழ்பெற்ற 'துபாய் மால் அக்வேரியம்' மற்றும் நீரின் கீழ் அமைந்த 'Underwater Zoo' வுக்கு சென்றனர்.  மனிதர்களைப்போல் 3 மடங்கு பெரிதான முதலை மற்றும் அரிய வகை மீன் வகைகள் கண்டு வியந்தனர்.  துபாயில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற  'Burj Khalifa' கட்டிடத்தின் 124 மாடியை 60 வினாடிக்கும் குறைவான நேரத்தில் மின்தாக்கியின் உதவியால் சென்றடைந்து 'சூர்ய அஸ்தமனம்' நிகழ்வை மிகமிக வியப்புடன், களிப்புடன் கண்டு ஆச்சர்யம் ஆனார்கள்.  கீழிறங்கி வந்தவுடன் வண்ண விளக்குகள் ஜொலிக்கும் அற்புதமான 'Fountain Show' கண்டு மகிழ்ந்தனர்.  பின் செயற்கையாக உருவாக்கப்பட்ட கடல் போன்ற ஆற்றில் மிதந்து செல்லும் 'Dhow Crusie' படகுக் கப்பலில் இரவு விருந்தினை முடித்துக் கொண்டு, தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்கள்.  

மறுநாள் 18.01.2015 அன்று காலை துபாய் அம்மா மெஸ் அண்ணாமலை அவர்கள் ஓட்டலிற்கு வந்து அனைவருக்கும் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.  பின் ஓட்டலில் காலைச் சிற்றுண்டி முடிந்து, துபாயின் சிறப்பு மிகுந்த அருங்காட்சியம் (Museum), மற்றும் 'Jumeriah Palm', துபாயின் மதிப்பு வாய்ந்த விலைமதிக்க முடியாத, 'Bhurj Alarab' ஓட்டலின் நீங்காத நினைவாக நிழற்படங்கள் எடுத்துக்கொண்டனர்.  Atlantis ஓட்டல், Jumeriah மசூதி மற்றும் Sheik Zayeed சாலையின் நினைவுகளை மிகவும் ஆர்வமுடன் பதிவு செய்து கொண்டனர்.  Back Street உணவகத்தில் மதிய உணவை முடித்து, துபாயின் மிக முக்கியமான Desert Safari அன்று மாலை சென்றனர்.  'Four Wheel Drive' கார்களில் 'Desert Safari' யின் தொடர் நிகழ்வாக 'Dune Bashing' சென்றது மிகச் சிறப்பான அனுபவம்.  'Quad Biking' ம், ஒட்டகச் சவாரியும் அடுத்து நிகழ்ந்த அற்புத அனுபவங்கள்.  இரவு உணவின் போது 'Belly Dance' கண்டு மகிழ்ந்தனர்.

19.01.2015 அன்று வறண்ட பாலைவன நாடாகிய துபாயின் 'செயற்கை பனிப் பூங்காவை' கண்ட போது 'மக்களும் அரசும் நினைத்தால் எத்தனை ஆச்சரியங்களை உருவாக்கிடலாம்' என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றியது.  செயற்கை Snow Park கிற்குள் அவர்கள் அளித்த சிறப்பான ஆடைகளையும் காலணிகளையும் அணிந்து வியப்புற்றனர்.  இக்காட்சிகளுடன் பல ride களில் சென்று வியப்புற்று எல்லாவற்றையும் பதிவு செய்தனர்.  மதிய உணவு Koyla உணவகத்தில் முடித்தனர்.  வருடத்தில் நான்கு மாதமே இயங்கும் 'Miracle Garden' னிற்கு மாலை சென்றனர்.  மலர்களின் செயற்கை வடிவங்கள் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது.  உலக நாடுகளில் பெரும்பாலானவற்றின் உற்பத்திப் பொருட்களின் மால்களையும், உலகம் சுருங்கி விட்டது என்ற 'Global Village' கருத்தை எடுத்துக்காட்டும் இடமாகத் திகழும் அந்த இடத்தின் மிகப்பெரிய 'வாகனங்கள் நிறுத்துமிடம்' கண்டு பிரமித்தனர்.  ஒரே நேரத்தில் 10,000 வாகனங்கள் நிறுத்தப்படக்கூடிய மிகப்பரந்த இடம் அது.  இரவு உணவு 'Senses' உணவகத்தில் முடித்துக் கொண்டு, பின் ஓட்டல் திரும்பினர்.

20.01.2015 அன்று காலை, திருச்சி நகரத்தார் துபாயிற்கு வந்திருந்த நிகழ்வைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஏறக்குறைய 6 மாதங்களுக்கு பிறகு மழை மிக அதிசயமாகப் பெய்தது.  காலை உணவு 'அரண்மனை' போன்ற அட்லாண்டிஸ் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  உலகின் அத்தனை விதமான உணவுகள் இருந்தது.  எதை எடுப்பது?  எதை விடுப்பது என்பது தெரியாமல் திண்டாடினார்கள்.  மலைமலையான விதம்விதமான உணவுகள் எல்லா இடத்திலும் கண்டு திகைத்து நின்றனர்.  அங்கிருந்து 'Mono Rail' மூலம் ஈச்ச மரங்களைப் போல வடிவமைப்புகள் அமையப் பெற்ற வீடுகள் இடையிடையே கடலும் சேர்ந்த இந்த அமைப்பை கண்டு ஆனந்தம் அடைந்தனர்.  பின் நம் மக்களின் மிகமிக உயரிய விருப்பமான தங்கம் வாங்க 'Gold Souk' சென்றடைந்தனர்.  பலர் நகைகள் வாங்கினர். மதிய உணவை 'Antique Bazar' ல் முடித்து, மாலை 'Dolphin Show', 'Aladdin Show' இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு களித்த பின் இரவு கூட்டுக் கூடத்திற்காக துபாய் நகரத்தார் சங்க முன்னாள் தலைவர் திரு சொக்கலிங்கம் அவர்கள் இல்லம் சென்றனர்.  அங்கு துபாய் நகரத்தார் மூத்த உறுப்பினர்கள் திரு கணேஷ், திரு முத்து சம்பத், திரு சொக்கலிங்கம், தலைவர் திரு M.பழனியப்பன், துணைத்தலைவர் திரு சோமசேகர், செயலாளர் திரு M.வள்ளியப்பன், திரு எஸ்.பி.சுப்பு, திரு முத்துக்கருப்பன், திரு முத்து திருப்பதி, திரு ரமேஷ் மற்றும் ஏராளமான இளைஞர்கள் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து திருச்சி நகரத்தரை வரவேற்று கௌரவித்தார்கள்.  எங்கு சென்றாலும் நம்மவர்களின் இயல்பு மாறாத விருந்தோபலும், வரவேற்பும் அங்குள்ள நகரத்தார்கள் பெருமையுடன் வழங்கியது, 'எட்டுத திக்கும் சேர்ந்து வாழ் வாங்கு வாழ்ந்து வரும்' நகரத்தார் மக்களை எண்ணி எண்ணி  பெருமைபடச் செய்தது மட்டுமல்ல, நன்றியோடு தினம் தினம் நினைவில் வந்து செல்லும் மறக்க முடியாத நிகழ்வாகும்.  'அம்மா மெஸ் அண்ணாமலை' அவர்களின் உணவகத்திலிருந்து விருந்தின் உணவுப்பண்டங்களை தயாரித்துத்திருந்தார்கள்.  பின் நடந்த கூட்டுக் கூட்டத்தில் 'துபாய் நகரத்தார்' 'துபாய் நகரத்தார் சங்க' வரலாற்றையும், காரைக்குடியில் அவர்கள் வாங்கியுள்ள இடத்தை பற்றியும் எடுத்துரைத்தனர்.  'துபாய் நகரத்தாருக்கு' திருச்சி நகரத்தார் சங்கம் பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்ததுடன், அவர்கள் அனைவருக்கும் திருச்சி நகரத்தார் சங்கம் சார்பில் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன.  இரவு இனிதே தங்குமிடத்திருக்கு திரும்பினார்கள்.

21.01.2015 அன்று காலை சுற்றுலாப் பயணிகள் 30 பேர் அபுதாபி சென்றனர். அபுதாபியில் உள்ள மிகப் பெரிய, தூய்மையான, அழகு நேர்த்தியுடன் அமைந்த மசூதியைக் கண்டு களித்து திரும்பினர்.  மீதியிருந்த 20 பேரும், துபாய் நகரத்து நம் ஆச்சிமார்கள் திருமதி சித்ரா ஆச்சி மற்றும் திருமதி வள்ளி ஆச்சி துணையுடன் துபாயில் ஷாப்பிங் செய்தனர்.  மதிய உணவை எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து 'ஷாமியானா' என்ற City Centre மாலில் முடித்துக்கொண்டு 'Day 2 Day' சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிய பின், பேருந்தின் மூலம் விமான நிலையம் அடைந்தனர்.

'இண்டிகோ' விமான அமைப்பின் மூலம் இரவு உணவை விமானத்திலேயே முடித்துப் பின் சென்னை திரும்பினர்.  காலை 4.00 மணி அளவில் சென்னையில் புறப்பட்டு திருச்சி வந்து சேர்ந்தனர்.

கடுமையான வெப்ப நாடான துபாயின் சீதோஷ்ண நிலை கூட எங்களுடன் ஒத்துழைத்தது மிகப் பெரிய இறைவனின் வரம்.  அனைவரும் அற்புதமான நினைவுகளுடன் மனமில்லாமல், பிரிந்து சென்றனர்.

No comments:

Post a Comment