Friday, 30 May 2014

Pattaya & Bangkok Tour

திருச்சி நகரத்தார் சங்க 42 உறுப்பினர்கள் 5  நாட்களுக்கு தாய்லாந்து சென்று திரும்பி வந்துள்ளனர்.  குடும்பத்துடன் தாய்லாந்திற்கா!!  என்று அனைவரும் வியந்தார்கள்.  ஆனால் அது அற்புதமான விடுமுறையாக அமைந்தது .

திருச்சியிலிருந்து ஒரு குளுகுளு பேருந்தில் சென்னை விமானநிலையம் சென்று, Thai ஏர்வேஸில் பாங்காக் சென்றார்கள்.  10 வருடங்களாக பாங்காக்-ல் குடும்பத்துடன் வசிக்கும் நண்பர் சிறுகூடல்பட்டி திரு.சரவணன் எல்லோரையும் வரவேற்க அந்த அதிகாலை நேரத்திலும், அதிகாலை பயணத்திற்கு ராணுவ ஆட்சியால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் விமானநிலையம் வந்து வரவேற்றது நகரத்தார் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கும் அபிமானத்திற்கும் சாட்சியாக இருந்தது.  அங்கிருந்து ஒரு குளுகுளு பேருந்தில் பட்டாயா சென்று 'Sriracha Tiger Zoo' ல் புலிக்குட்டி, முதலைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.  நகரத்தார் அனைவரும் புலிக்கு பால் கொடுத்து மகிழ்ந்தார்கள்.  பன்றிகளின் ஓட்டப் பந்தயமும், முதலையின் வாய்க்குள் மனிதன் தலையை கொடுப்பதைப் பார்த்தும் ரசித்தார்கள்.  பின் சிறந்த 3 நட்சத்திர 'Golden beach Pattaya' ஹோட்டலில் தங்கினார்கள். உணவு தரமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது.  இரவு புகழ்பெற்ற Alcazar show பார்த்தார்கள்.  அன்று 25 வருடங்களாக பட்டாயாவில் வசிக்கும் தேவகோட்டையை சார்ந்த என்ஜினியர் திரு.வெள்ளையன் அவர்கள் வந்து பரிசு வழங்கி நகரதார்களை கௌரவித்தார்கள்.

இரண்டாம் நாள் காலை பவளத் தீவிற்கு Speed boat ல் சென்று
கடலுக்கடியில் நடந்து, பவளப் பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை  பார்த்தும் தொட்டும் அனுபவித்தார்கள்.  பின் 'Parasailing' என்ற வானில் பறந்து திரியும் நிகழ்ச்சியில் 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் முன்னால்
தலைவர் திரு.அருணாசலம் செட்டியார் அவர்களும், ஆச்சிமார்களும் பங்கு பெற்றதை தாய்லாந்திற்கு புறப்படும் முன் யாரும் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.  மதியம் Noongnooch Village என்ற 1000 ஏக்கர் பரப்பளவுள்ள தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து,  தாய்லாந்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சியையும், யானைகளின் நடனத்தையும் கண்டு மகிழ்ந்தார்கள்.   இது ஒரு தனியாருக்கு சொந்தமானது என்று கேட்டு வியந்தார்கள். எல்லோருக்கும் நேரம் போதவில்லை என்று நினைக்க தோன்றியது.

மூன்றாம் நாள் காலை பட்டாயாவில் உள்ள நவரத்தின கற்கள் தொழிற்சாலை சென்று பார்த்தும் வாங்கியும் மகிழ்ந்தார்கள்.  அதன் பின் பரந்த மிருக காட்சி சாலை சென்று Dolphin show பார்த்து ரசித்து அத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின் திறந்தவெளி மிருக காட்சியில் பாதுகாப்பாக பேருந்தில் இருந்தபடியே சிங்கம், புலி, கரடி, மான், ஒட்டகச்சிவிங்கி என்று
அத்தனை மிருகங்களையும் பார்த்து மகிழ்ந்தார்கள்.  இங்கு அவர்கள் மிகவும் வியந்தது பொது கழிப்பறையின் சுத்தமும், அதன் அலங்கரிப்பும்.  இங்குள்ள பொதுக் கழிப்பறை தாய்லாந்தின் மிகச் சிறந்த பொதுக் கழிப்பறை என்ற விருதைப் பெற்றுள்ளது.  ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பல தரப்பட்ட விருந்தினர்கள் வருகை புரியும் இடத்தில் இவ்வளவு நேர்த்தியாகவும், அழகாகவும் சுகந்த மணம் வீசக் கூடிய நிலையில் கழிப்பறையை நிர்வகிக்க முடியும் என்பது பேரச்சர்யம்.

மூன்றாம் நாள் இரவு 'Chao Phraya' என்ற நடுத்தர கப்பலில் சாவோ ப்ராயா நதியில் சென்று பாங்காக் நகரின் கட்டிடங்களையும், புகழ்பெற்ற சரித்திர சின்னங்களையும் கப்பலில் இருந்தபடியே பார்த்து மகிழ்ந்தார்கள்.  ஆட்டமும், பாட்டமுமாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு மிகவும் ரசித்த நிகழ்வு இது.  Superb...

அன்றிரவு பாங்காக்கின் சிறந்த 3 நட்சத்திர ஹோட்டல் Ambassador - ல் தங்கி, காலை 'Death Railway' - 'Bridge on River Kwai' பார்த்து விட்டு Jeath war Museum த்தில் இரண்டாம் உலகப்போரின் அழிவுகளை எண்ணி வருந்தினார்கள்.  'Boat House' ல் (Best in the world என்கிறார்கள்) தாய்லாந்தின் பாரம்பரிய உணவை
உண்டு மகிழ்ந்தார்கள். அங்கு திரு.சரவணன் அவர்கள் குடும்பத்துடன் வந்து நகரத்தார் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.  மாலை 'Siam Niramit' என்ற show பார்த்தார்கள்.  இது 'Guiness Record' ல் உள்ள ஒரு show.  Biggest Stage-Technology யை ஒவ்வொரு அசைவிலும் உபயோகபடுத்தி இருந்தார்கள்.  அந்த 'Convention hall' அற்புதமாக இருந்தது.  இவ்வளவு முடியுமா என்று வியந்தார்கள்.

இறுதி நாளன்று காலை Golden Buddha யை வணங்கினார்கள்.  அசல் தங்கம் 5.50 ton.. Grand Palace.  Wat po... வும் பிரமிக்கவைத்தது.  இங்குள்ள பௌத்தர் ஆலயங்களில் சிவன், விஷ்ணு சிலைகள், இராமாயணக் காட்சிகள் வடிவமைப்பெற்றிருந்தது, புத்த மதத்திற்கு அடிப்படை இந்து மதமே என்பதைப்  பறை சாற்றியது.  இந்த விளக்கங்களையும், நுட்பங்களையும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வழிகாட்டி (guide) எடுத்துக் கூறியது
மிகவும் பெருமையாக இருந்தது.  அன்று காலையில் திரு.கிருஷ்ணன் அவர்கள், நகரத்தாருக்கு shopping பற்றிய விவரங்களை  சொன்னார்கள்.  பின் மதியம் 'Shopping spree' தாய்லாந்தை நம்மவர்கள் விலை பேசினார்கள்.  சுவர்னபூமி   விமானநிலையத்தில் மகாவிஷ்ணு பாற்கடலை கடையும் நிகழ்ச்சியை மிகப் பெரிய சிலையாக வடிவமைத்து வைத்திருந்தது நமது கலாச்சாரத்தை எண்ணி பெருமிதம் கொள்ள வைத்தது.  இரவு சென்னைக்கு Thai ஏர்வேஸில் வந்து அங்கிருந்து குளுகுளு பேருந்தில் காலை 6 மணிக்கு  திருச்சியை அடைந்தார்கள்.

குழந்தைகளும், பெரியவர்களும், பாட்டிகளும், அவர்தம் பேரன் பேத்திகளும் சேர்ந்து தாய்லாந்தை, அதன் ஆரோக்கியமான, அற்புதமான மக்களை ரசித்து மகிழ்ந்தார்கள்.

Friday, 16 May 2014

Palani Kattalai Abishegam

15.05.2014 அன்று பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் நகரத்தார் சங்கத்தினரின் கட்டளை அபிஷேகம் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. உறுப்பினர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.  காலை டிபன் பழநி நகரதார்களால் வழங்கப்பட்டது. சங்கத்தின் அன்னதானமும் அன்னதானக் கூடத்தில் அன்றைய தினம் வழங்கப்பட்டது.  அபிஷேகத்திற்கு பின் மாலை PLA மண்டபத்தில் பழநி நகரத்தாரால் டிபன் வழங்கப்பட்டது.  பின்னர் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பின் அங்கு திண்டுக்கல் நகரத்தார் விருந்து அளித்தனர்.  இரவு 11 மணிக்கு மன நிறைவுடன் திருச்சி வந்து சேர்ந்தார்கள்.  அன்று பூம்புகார் பட்டினத்தார் பூஜைக்கு வருடா வருடம் ரூ.5000/- கொடுப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

Sunday, 4 May 2014

Thiruvasagam Mutroothal

ஆன்மீகத்தில் செட்டியார்களின் ஈடுபாடு மிக அதிகம். இதன் உதாரணமாக திருச்சிராப்பள்ளி நகரத்தார் சங்கங்கத்தின் மகளிர் அணி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை மே மாதம் 4ந் தேதி (04.05.2014) சங்கக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோவில் குழுவினர்கள் வந்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.  காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 4 மணி வரை தொய்வின்றி, அனைவரும் பாராட்டும் வகையில் நடந்தது. 

'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப 100க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருவாசகம் என்னும் தேனைப் பருகி மகிழ்ந்து சென்றனர். 

வந்திருந்த அனைவர்க்கும் மோர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.  ஆன்மீக தலைவர் திரு SORM.கணபதி செட்டியார், திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோவில் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள்.  நிகழ்ச்சி தேனீர் மற்றும் snacksயுடம் இனிதே நிறைவு பெற்றது.

Thursday, 1 May 2014

Tholkappiya Chammal Parattu Kootam

30.04.2014 ல் கார்த்திகைத் தினத்தன்று கார்த்திகை வழிபாட்டுடன் தொல்காப்பிய செம்மல் தமிழண்ணல் அவர்களுக்கு, குடியரசுத் தலைவர் அவர்களிடம் மத்திய ' செம்மொழித் தமிழ் ஆய்வு ' நிறுவனத்தின் 'தொல்காப்பியர் விருது' பெற்றமைக்காக பாராட்டி கேடயம் வழங்குதல் நிகிழ்ச்சி நடைபெற்றது.  'தொல்காப்பியர் விருது' பெற்ற முதல் நகரத்தார் நெற்குப்பையைச் சார்ந்த திரு.தமிழண்ணல் என்ற இராம.பெரியகருப்பன் அவார்.   திரு.சுப்பையா  தொல்காப்பியச் செம்மல் அவர்கள் பற்றி அறிமுகம் செய்தபின் அவர்களுக்கு வெள்ளிக் கேடயம் வழங்கப்பட்டது.  தமிழண்ணல் அவர்கள் தம் அனுபவங்கள் பற்றியும், தொல்காப்பியர் விருது பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.  அன்றைய இரவு விருந்தினை தனது 81வது வயது பூர்த்தியை முன்னிட்டு மூத்த செயற்குழு உறுப்பினர் திரு.S.சண்முகம் செட்டியார் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.  அன்றைய கூட்டத்தில் சுமார் 325 பேர் இனிதே கலந்து கொண்டார்கள்.